இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நீங்கள் (மோடி) தயாராக இருந்தால் நாங்கள் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். போர் என்பது பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதால் நாங்கள் உங்களிடம் சமாதானத்திற்கு வருகிறோம்.
நான் இந்தியாவில் மோடியை சந்தித்த போது ஒரு சிறிய மக்கள் கூட்டம் இந்தியா -பாகிஸ்தானிடையே நடைபெறும் சமாதான நடைமுறைகளை சீர்குலைக்க முயற்சி செய்யலாம் என கூறினேன். ஆனால், உரி சம்பவம் நடந்த போது இந்தியா விசாரிக்காமல் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியது. மோடி பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்.
தண்ணீரை நிறுத்துவது, சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மோடி பேசக்கூடாது. எந்த ஒரு ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் ராணுவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் ஒற்றுமையாக உள்ளது.
நவாஸ் ஷெரீப் போன்று எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல. நவாஸ் செரீபுக்கு பணத்தின் மீது அதிக ஆசை. ஐக்கிய நாடுகள் பொது சபையில் செரீப் தயக்கத்துடன் காஷ்மீர் ஆதரவு உரையை நிகழ்த்தினார்.
நவாஸ் செரீப் இந்த உரையை நிகழ்த்த விரும்பவில்லை, ஆனால் ராணுவ தளபதி ரகீல் செரீப் அழுத்தம் காரணமாக பேசி உள்ளார் என மோடி கூறினார். பாகிஸ்தானுடன் சமாதானத்திற்குப் பதிலாக போரை தேர்வு செய்தால் இந்தியா அதிக இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியா ஒளிர்கிறது என்ற மோடியின் கனவும் நிறைவேறாது.
காஷ்மீரிகள் சுதந்திரத்திற்காக நாங்கள் எங்கள் தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை தொடர்ந்து அளிப்போம். இந்து மற்றும் மற்றும் கிறிஸ்துவர்களின் உரிமை மறுக்கபட்டால் அவர்களுக்காகவும் எங்கள் குரல் ஒலிக்கும்.
பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்றால், மொகரம் மாதத்திற்குப் பிறகு அவரை ஆட்சியில் நீடிக்க அனுமதிக்க விடமாட்டோம். நவாஸ் ஷெரீப்பின் காலம் முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.