புஸ்ஸல்லாவ தூக்கிட்டு தற்கொலை சம்பவம்;பொலிஸாரின் அசமந்த போக்கையே காட்டுகின்றது:இராதாகிருஸ்ணன்

க.கிஷாந்தன்

பொலிஸ் நிலையம் என்பது மக்களின் பாதுகாப்புக்காகவே அன்றி அவர்களின் உயிரை கேள்விக்குறியாக்கும் இடம் அல்ல. எனவே பொலிஸ் காவலில் இருக்கின்ற பொழுது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுவதானது பொலிஸாரின் அசமந்த போக்கையே காட்டுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்  (19.09.206) அன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

radhakrishnan-photo

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் 18.09.2016 அன்று ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

பொலிஸ் நிலையம் என்பது பொது மக்களை பாதுகாப்பதற்காகவும். நாட்டின் சமாதானத்தை நிலைநிறுத்துவதுமே அவர்களுடைய முக்கிய பொறுப்பாகும். பொலிஸார் என்பவர்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டியவர்கள். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அதனை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றமே. 

ஒருவர் ஏதோ ஒரு குற்றத்திற்காக அல்லது சந்தேகத்தின் பேரில் கொண்டுவரப்படும் பொழுது அவர்களை தாக்குவதற்கு பொலிசாருக்கு உரிமை இல்லை. அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிசாருக்கு இருக்கின்றது.

ஆனால் பொலிஸ் காவலில் இருக்கின்ற ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது என்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தும். எனவே இது தொடர்பாக இருவர் உடனடியாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது மாத்திரம் இதற்கு உரிய தீர்வாக அமையாது. இது தொடர்பாக உரிய முறையில் சுயாதீனமாக விசாரணைகள் மேற்கொண்டு உண்மை நிலைமையை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் பொது மக்கள் பொலிசார் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

இந்த விடயத்தில் பொதுமக்களும் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்கள் மேலும் மேலும் தவறுகளை செய்யக்கூடாது .இந்த விடயம் தொடர்பில் உரியவர்களுக்கு நியாயம் கிடைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.