அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம் அருகே இன்று மர்மப் பொருள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மதுபான விடுதி ஓரமாக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் இன்று பயங்கர சப்தத்துடன் ஒரு மர்மப் பொருள் வெடித்து சிதறியது.
அந்த குப்பைத் தொட்டியில் கிடந்த மர்மப் பொருளை, வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் ரோபோட் கத்திரித்து, பரிசோதிக்க முயன்றபோது, அது திடீரென வெடித்து சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அந்த குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சில ஒயர்களுடன், பைப் இணைக்கப்பட்டிருந்த கைப்பையை பார்த்தனர். அது, வெடிப்பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் ரோபோட் மூலம் அதை செயலிழக்க வைக்க முயன்றனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த மர்மப் பொருள் வெடித்தபோது, குப்பைத் தொட்டியின் அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள உள்ளூர் போலீசார், இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மன்ஹாட்டன் நகரின் செல்சியா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இதேபோல் ஒரு மர்மப் பொருள் வெடித்த விபத்தில் 29 பேர் காயம் அடைந்தது நினைவிருக்கலாம்.