‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’
க.கிஷாந்தன்
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் முயற்சியின் பயனாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பாடசாலைகளுக்கு இலவசமாக பெற்றுக் கொடுக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் முதலாவது சிலை (19.09.2016) அன்று ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
காலை 10.00 மணிக்கு மல்லியப்யு சந்தியில் ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டது. ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த ஊர்வலத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையானது ஊர்வலமாக மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் ஹட்டன் பிரதான வீதி ஊடாக காலை 11.30 மணியளவில் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், முத்தையா ராமசாமி, சிங் பொன்னையா, பிலிப்குமார், கணபதிகனகராஜ், முன்னால் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் டாகடர் நந்தகுமார் ஹட்டன் நகர வர்த்தகர்கள் கல்விமான்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த வீ.சி.சந்தோசம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 16 திருவள்ளுவர் திருவுருவச் சிலைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க இலவசமாக பெற்றுக் கொடுத்திருந்தார்.
இந்த சிலைகள் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளுக்கு மாவட்ட ரீதியாக கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடைய பங்குபற்றுதலுடன் பாடசாலைகளுக்கு கையளிக்கப்பட்டுது. இந்த நிகழ்வில் வீ.சி.சந்தோசம் இலங்கைக்கு வருகை தந்து நிகழ்வில் பங்குபற்றியதோடு ஜனாதிபதி பிரதமர் ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ். விஜயசிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.