மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது, உள்ளூர் இந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியமைக்கு, பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஊழல் மிக்க விமான நிலைய நிர்வாகம் என்பனவே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
கோலாலம்பூர் விமான நிலையத்தின் குடிவரவு பகுதிக்கு எவரும் பாதுகாப்பு சோதனைகள் இன்றி செல்லமுடியும்.
எனவே அதிமுக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் உறுதிப்பாடு இல்லை என்று இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது
இந்தநிலையில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் அன்சார், எவரும் அனுமதிக்கப்படாத அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தில் வைத்தே தாக்கப்பட்டார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரின் பயணம் தொடர்பில் ஏற்கனவே உயர்ஸ்தானிகர் அன்சார், மலேசிய பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
எனினும் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முதல்நாள், குறித்த உயர்ஸ்தானிகரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசப்படலாம் என்ற அச்சம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர் அடுத்தநாள் விமான நிலையத்துக்கு வரும்போது இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கும் செவிசாய்க்காது, உயர்ஸ்தானிகருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இந்திய நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.