வங்காளதேசத்தில் தொழிற்சாலை தீவிபத்தில் 32 பேர் உடல் கருகி பலி

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் சிகரெட் மற்றும் உணவுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் சரிகை காகிதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன.

a-woman-mourns-at-a-hospital
காலை சுமார் 6.15 மணியளவில் இங்குள்ள ஒரு ராட்சத கொதிகலன் (பாய்லர்) திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் மளமளவென தீ பரவியது. உள்ளே இருந்த தொழிலாளர்கள் பீதியால் அலறியபடியே உயிர்பயத்துடன் வெளியே ஓடிவந்தனர்.

அவர்களில் பத்துபேர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 50-க்கும் அதிகமானோர் டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

fire-20160911034843-770x430

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்றுகாலைவரை அடுத்தடுத்து பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் வரை முழுமையாக தீ அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த தொழிற்சாலை கட்டிடத்துக்குள் இருந்து கருகிய நிலையில் 3 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த கோர விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இவ்விபத்தில் பலியான ஒருவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அருகாமையில் உள்ள டோங்கி காவல் நிலையத்தில் டம்பாக்கோ பேக்கிங் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் மேலும் ஆறுபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.