மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐ.நா.சபையினால் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்:பான் கீ மூன்

601424891UNதற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். 

தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அனைத்து மாகாணங்களுக்கும் நியாயமான அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இலங்கையின் மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார். 

இதன்போது, புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர் நாயகத்திடம் விளக்கியுள்ளார். 

இம்மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத் தொடரில் சர்வதேச சமூகத்துடன் உள்ள உறவுகளை மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பு தனக்கு தோன்றியுள்ளதாக பான் கீ மூன் கூறியுள்ளார். 

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று (02) யாழிற்கான விஜயத்தில் ஈடுபட உள்ளார். 

அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

இவை தவிர கொழும்பில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலரை சந்திக்க உள்ள பான் கீ மூன் இன்று மாலை கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.