தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் அதிபராக நிகோலஸ் மதுரோ வகிக்கிறார். சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிந்துவிட்டதால் அங்கு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை ஏற்பட்டுள்ளன. பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் அதிபர் மதுரோ பதவி விலகிவிட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்காக நெல்சன் ரிவாஸ் (35) என்பவர் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதிபர் நிகோலஸ் மதுரோ கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று தலைநகர் கராகஸ் நகருக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு ரிவாஸ் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். சுமார் 10 கி.மீட்டர் தூரம் அலை கடலென ஆர்ப்பரித்து வந்தனர்.
கராகஸ் நகரின் தெருக்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருந்தனர். மதுரோ வெளியே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை ஏந்தி வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே அதிபர் மதுரோவின் ஆதரவாளர்கள் கராகஸ் நகரில் பேரணி நடத்தினார்கள். புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதை தடுக்க தாங்கள் திரண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இப்பேரணியில் அதிபர் நிகோலஸ் மதுரோவும் கலந்து கொண்டார்.
எதிர்ப்பாளர்கள் நடத்த இருந்த புரட்சி முறியடிக்கப்பட்டதாகவும், பலரது சாவுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.