இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் உட்பட உடலை முற்றாக மறைத்து அணியும் புர்கா அல்லது நிகாப் எனப்படும் ஆடைக்கு தடைவிதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினரால் முன்மொழியப்பட்ட யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிராகரித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சமயம், புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரி ஒருவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
நாட்டில் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற குறிப்பிட்ட பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதப் போக்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர்களாலேயே புர்கா அல்லது நிகாப் ஆடைகள் அணியப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு உயரதிகாரி, எனவே இதனை தடை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது என்றும் தனது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த யோசனையை கேட்டவுடன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு தடை விதிப்பது அரசாங்கத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கே தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
எனவே அவர்களை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை எம்மால் மேற்கொள்ள முடியாது என்றும் பிரதமர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆடை புழக்கத்தில் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல்களை நடாத்துவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதே குறித்த பாதுகாப்பு புலனாய்வு உயரதிகாரியின் வாதமாகும். எனினும் மேற்படி யோசனையை முன்மொழிவதற்கு முன்னதாக, முப்படை தளபதிகள் மூவரும் நாட்டின் சமகால பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
எனினும் அவர்களில் எவரும் புர்கா அல்லது நிகாப் ஆடையானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரியவருகிறது.
இதற்கிடையில், மேற்படி யோசனையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியே இது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் புர்கா மற்றும் நிகாப் ஆடைகள் அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் நெதர்லாந்தில் பகுதியளவில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.