பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விசாரணைகள் தொடர்பில் கைப்பற்றப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் இன்று கனடாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
கனடாவின் பிரிடிஷ் கொலம்பியா இரசாயன ஆய்வு கூடத்துக்கு இந்த சி.சி.ரி.வி.காட்சிகள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொண்டு செல்லப்படவுள்ளன.
கொழும்பு நீதிவான் நீதிமன்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சி.சி.ரி.வி.காட்சிகள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் சி.டப்ளியூ. விக்ரமசேகர, சார்ஜன் ரத்நப் பிரிய ஆகியோரால் கையேற்கப்பட்டு அவர்கள் ஊடாகவே கனடாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இது தொடர்பில் 36 கேள்விகளைக் கொண்ட கொத்தொன்றினை தயார் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அது தொடர்பில் மன்றுக்கு அறிவித்துள்ளதுடன், அந்த கேள்விக்கொத்துக்கான பதில்களையே சி.சி.ரி.வி. ஆய்வுகளில் இருந்து எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.
முன்னதாக பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காட்சிகளை அடையாளங் காணும் செயற்பாட்டிற்காக கனடாவில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா நிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் முதலாம் திகதி அறிவித்துள்ளது.
சர்வதேச பொலிஸார் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கையின் பலனாக கனடாவின் குறித்த நிறுவனத்துக்கு தெளிவற்ற குறித்த சி.சி.ரி.வி. காட்சிகளை அனுப்பக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு இதன்போது தெரிவித்திருந்தது.
அத்துடன் குறித்த நிறுவனம் ஊடாக சி.சி.ரி.வி. காட்சிகள் குறித்த ஆய்வு தொடர்பில் நேரடியாகவும் தொடர்புகளைப் பேணும் வாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு அறிவித்திருந்தது.
சி.சி.ரி.வி. காட்சிகள் கொழும்பு பல்கலையின் கணினி தொடர்பிலான ஆய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்ட போதும் அங்கு அதனை அடையாளம் காண முடியாது போனது.
இந் நிலையில் அப்பல்கலைக்கழகம் குறித்த காட்சிகளை சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு அனுப்ப மன்றுக்கு பரிந்துரை செய்தது.
இந் நிலையிலேயெ மன்றின் அனுமதிக்கு அமைய இன்று அந்த சி.சி.ரி.வி.காட்சிகள் கனடாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.