ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.
கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கோரிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பாத யாத்திரை செல்வோர் மாவனெல்லை நகரைத் தவிர்த்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, மாவனெல்ல நீதவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார்.
மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.