பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது…?

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது – பிரதமரிடம் வவுனியா உள்ளூர் விலைபொருள் சங்கம் கோரிக்கை

வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வவுனியா உள்ளூர் விலைபொருள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில அரசியல் சக்திகள் தமது சுய இலாபத்திற்காக இந்த விடயத்தை திசை திருப்புவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் க. செல்லத்துரை, செயலாளர் ஜே. நந்தகுமார், பொருளாளர் இரா. சுப்பிரமணியம் ஆகியோர் கையொப்பமிட்டு பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொருளாதார மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். நீண்ட கால யுத்தத்தின் பின்னர் சமாதான சூழல் ஏற்பட்டு மக்கள் மீளக்குடியேறி வரும் இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் அமைவது எமது பொருளாதாரத்தை மேம்படுத்தும். 

நீண்டகாலமாக விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதில் எமது விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலான வவுனியா மவட்டத்தில் இது அமைவதே பொருத்தமானதாகும். காணித்தெரிவில் மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இழுபறி நிலை கடந்த ஆறு மாதகாலமாக நீடித்து வருகின்றது. 

2016 மே 10 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திக்குழு அமர்வில், தாண்டிக்குளத்தில் 5 ஏக்கர் காணி வழங்குவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அமைச்சிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எனவே இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்து, தாண்டிக்குளத்திலேயே அமைக்க வேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

13664440_622412024591513_104815870_n