பொரலஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக கட்டட நிர்மாணங்களை அகற்றுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் அதற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளது.
பொரலஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் விஸ்தரிப்புப் பணிகள் பொரலஸ்கமுவ நகர சபையிடமிருந்து அனுமதி பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பௌத்த குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நகர சபை முதல்வர்
வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துக்கும் புறம்பாக விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுவதாக பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு எதிராக நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டபோது நுகேகொடை மேலதிக நீதிவான் அனுமதிப்பத்திரத்துக்கு புறம்பாக நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான RRT யின் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவருக்கு பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட விரோத நிர்மாணம் எனத் தெரிவித்து வழக்குத் தொடர்வதற்கு அதிகாரமில்லை எனக் கூறினார்.
கட்டட விஸ்தரிப்புக்கு சட்ட ரீதியான அனுமதி பெறப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
அதனால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதென்றார்.