மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது சிலையை நிறுவுவதற்கு ராமநாதபுரம் ஜம்இய்யதுல் உலமா சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு பேய்க்கரும்பு நினைவிடத்தில் சிலை எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சிலை எழுப்பக் கூடாது என்று ஜம்இய்யதுல் உலமா சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிலை எழுப்புவது முஸ்லிம் ஷரீஆ சட்டத்திற்கு எதிரானது என்று அந்த சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து உலமா சபையின் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலமா சபை தலைவர் வலியுல்லா நூரி கூறும்போது, “இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும், தனிநபர் வழிபாட்டுக்கும் அனுமதியளிக்காது.
கலாமுக்கு மரியாதை செய்வதென்பது அவரது உபதேசங்களின் படி நடப்பதாகும். வலுவான, வளர்ந்த இந்தியா என்ற அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதும், இளைஞர்கள் உச்சத்தை எட்ட கனவு காணவேண்டும் என்று கூறியுளார், இதனை நிறைவேற்றுவதும்தான் கலாமுக்கு நாம் செய்யும் மரியாதை” என்றார்.
கலாமின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக, இதன் மூலம் இளைஞர்கள் அவரிடமிருந்து ஊக்கம் பெற நினைவு மண்டபம், கேட்போர் கூடம், அறிவுமையம் அல்லது மியூசியம் அமைப்பதே சிறந்தது.
அதிகாரிகள் சிலை அமைப்பதை தவிர்ப்பது நல்லது என்று உலமா சபையின் செயலர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
தங்களது இந்தக் கருத்தை கலாம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும், ஆனாலும் ஜூலை 27- ஆம் திகதி கலாம் சிலைதிறப்பின் போது தாங்கள் எந்தவித இடையூறுமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த மாட்டோம் என்றும் உலமா சபை உறுதியளித்தது.
சிலை அமைப்பதற்கான பணிகள் ஏறக்குறைய முடியும் தறுவாயில் உள்ளன.
ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ வளாகத்தில் உள்ளது போல் 7 அடி உயரத்திற்கு இச்சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.