மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையையும் தொடரவிடாது நடவடிக்கை எடுக்கவும்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பான பிரச்சினையை போல் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையையும் தொடரவிடாது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த மருத்துவக்கல்லூரி தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள், நீதிபதி உட்பட சமூகத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களின் பிள்ளைகள் இந்த மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

சட்டத்தை மீறி, நடைமுறைகளை மீறி தரமற்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மருத்துவ பட்டங்களை வழங்கினால், நாட்டுக்கு கேடு ஏற்படும்.

இதனால், இதற்கு எதிராக கருத்து வெளியிடும் தரப்பினர் முன்வைக்கும் விடயங்களை கவனத்தில் கொண்டு துரிதமான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.