தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே தவித்து வந்த 44 தமிழ் அகதிகள், ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரை இறங்க, அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 20) ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) அதிகாரிகள், அகதிகளை சந்தித்தனர்.
ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில், இந்தோனேசிய அரசாங்கம், அகதிகள் தொடர்பான ஐ.நா சாசனத்தில் இன்னும் கையெழுத்திடாத நாடு. அகதிகளுக்குரிய குறைந்தபட்ச உரிமைகள் கூட அவர்களுக்கு அங்கு கிடைக்காது.
அதே நேரம், தமிழ் அகதிகளும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நல்வாழ்விற்காக ஒரு போராட்டம்:
“ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் எங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். நாங்கள் அதற்காகவே ஆஸ்திரேலியாவுக்கு கடல் பயணம் மேற்கொண்டோம். அதற்காக ஒரு நபருக்கு ஒன்றரை லட்சம் இந்திய ரூபாய் வரை ஏஜென்ட்டுக்கு கொடுத்துள்ளோம்” என்று அம்மக்கள் கூறியதாக அகதிகளுக்காக இயங்கும் மைக்ரேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான முகாம்களில் 60,000 த்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இருக்கின்றனர். ’25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு, தொடர்ந்து இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதால் இப்படியான முடிவை அகதிகள் எடுக்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இலங்கையில் போர் சூழல் இல்லை என்றாலும், அங்கு நடக்கும் தொடர்ச்சியான கைதுகளும் விசாரணைகளும் தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஈழ அகதியிடம் இதுகுறித்துப் பேசியபோது, “உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம் என்று தெரிந்தேதான் எம்மக்கள் இம்முடிவை எடுக்கிறார்கள். இதை நீங்கள் தட்டையாக பார்க்காமல், எவ்வளவு மன அழுத்தத்தில் இம்முடிவை எடுத்து இருப்பார்கள் என்று பாருங்கள். நாங்கள் பேராசைப்படவில்லை. குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையாவது எங்களுக்கு அளியுங்கள்.” என்றார்.
ஆஸ்திரேலியாவும் ஏற்றுக் கொள்ளாது:
இவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க அனுமதித்தாலும் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் ஆஸ்திரேலிய அரசும் இவர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.
முறைகேடாக ஆஸ்திரேலியாவிற்குள் வருவோரை ஏற்றுக்கொள்ள அந்நாடும் தயாராக இல்லை. இதுகுறித்து ஆஸ்திரேலிய தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல், ” ஆஸ்திரேலியா தன்னுடைய கரையோர பாதுகாப்பு கொள்கைகளை மாற்றி இருப்பதாக கூறியே, ஆள்கடத்தல்காரர்கள் முறைகேடாக மக்களை இங்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், இங்கு அத்தகைய எந்த மாற்றமும் எங்கள் கொள்கைகளில் கொண்டுவரப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு ஆட்கடத்தல் படகும் திருப்பி அனுப்பப்படும்” என்று அண்மையில் கூறி உள்ளார்.
இந்தச் சூழலில், இந்தோனேசியாவில் தவித்து வரும் 44 தமிழ் அகதிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.