எப்பாவல தீ , 50-60 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது

eb80370deb15833510dd982e94a53f69_L_Fotor

 

இலங்கை அரச பொஸ்பேட் நிறுவனத்தின் எப்பாவல அலுவலகத்தில் இன்று பரவிய தீ காரணமாக, சுமார் 50-60 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் உபாலி அனுராத திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை 03.00 மணியளவில் இந்த தீப் பரவல் ஆரம்பித்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த கட்டடத்தில் தீ பற்றியுள்ளதை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர். 

இதன்படி அங்கு விரைந்த அனுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இதனால் குறித்த அலுவலகத்தின் வழங்கல் பிரிவு, கணக்காய்வு பிரிவு, ஆவண காப்பகங்கள் போன்றவற்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், அங்கிருந்த கனணி, தளபாடங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

இதேவேளை, இன்று மற்றும் நாளை இலங்கை அரச பொஸ்பரேட் நிறுவனத்தின் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த அலுவலகத்திலுள்ள பாதுகாப்புப் பிரிவின் கெமரா கட்டமைப்பை ஆராய்ந்து தீக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். 

இதுஇவ்வாறு இருக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் பிரிவின் முக்கிய ஆவணங்கள் சில அங்கிருந்தமையால் அவற்றை அழிக்கும் நோக்குடன் இந்த தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என, பொய்யான தகவல்கள் பரவி வருவதாக, குறிப்பிட்ட உபாலி அனுராத திஸாநாயக்க, தான் அதனை மறுப்பதாகவும் கூறியுள்ளார். 

அத்துடன் இந்த தீயினால் பெருமளவு ஆவணங்கள் எரிந்துள்ள போதும் அவற்றுள் முக்கியமான ஆவணங்களின் நகல்கள் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், சேதமடைந்த அலுவலகத்தை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு இரண்டு மாத காலங்கள் வரை தேவைப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் உபாலி அனுராத திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.