கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும் : எம்.எச்.எம்.நவவி MP

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளை புத்தளம் பெரியபள்ளி மற்றும் உலமா சபை என்பன வழிநடத்த வேண்டும்” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்துள்ளார்.

navavi

 

புத்தளத்தில் இயங்கிவரும் விஞ்ஞானக் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆரம்பித்த பணிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கமாகும்.

அத்துடன், புத்தளத்தில் பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் உள்ள போதிலும் கல்வி விடயத்தில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது இளைய சமுதாயத்தினரை வெற்றிப்பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும். எமது மாவட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகிறது. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.

புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு மூன்று மாடி நிர்வாகக் கட்டடமும், புத்தளம் அனந்தா தேசியப் பாடசாலைக்கும் நிர்வாகக் கட்டடமொன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்போது கேள்வி மனுக் கோரல் செய்யும் நிலையிலுள்ளது.

அத்தோடு, மதுரங்குளி, கற்பிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும் புதிய கட்டடங்கள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன” எனவும் தெரிவித்துள்ளார்.