எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தேர்தல் நடவடிக்கை முறை

2016ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு மற்றும், வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சர்வஜன வாக்குரிமை என்பது இலங்கையின் குடியுரிமையாகும், மக்களின் இறைமையை வெளிப்படுத்த முடிவது வாக்குரிமையூடாக மட்டுமே என தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் 2016 ஜூன் 16 ஆம் திகதிக்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், கணக்கெடுப்பு படிவத்தினை ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து கையளிக்குமாறும் கூறினார்.

அவ்வாறு குறித்த திகதிக்குள் கையளிக்க முடியாவிடின் அதனை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கையளிக்குமாறும் அறிவித்தார்.

வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவதும், வாக்களிப்பதும் மக்களின் உரிமை, இது தொடர்பாக அனைவருக்கும் அறியத்தருமாரும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார்.

“எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தேர்தல் நடவடிக்கை முறை” எனும் தொனிப் பொருளில் இந்த ஒன்று கூடல் நிகழ்வு இடம் பெற்றது. நாளை இது தொடர்பில் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளுக்கும் செய்தி அனுப்பப்படும் என்றும், செவிப்புலன் அற்றவர்களுக்கு இந்தச் செய்தி சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.