தமிழகத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள், ஒருவார கால போராட்டத்துக்கு பின் இந்தோனேசியாவில் ஜூன் 18 தரையிறக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தோனேசியா அரசு இதுதொடர்பாக மெளனம் காப்பதால் இந்த முடிவு தற்காலிகமானது என்றும் அவர்கள் மீண்டும் வெளியேற்றபடலாம் என்ற அச்சத்தையும் ஏசெஹ் மாகாணத்தில் செயல்படும் கியூடன்யோ அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அகதிகள் தரையிறக்கப்பட்ட பின்னரும் அவர்களை மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் சந்திப்பதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.
அகதிகளிடம் தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட அகதிகள் அடையாள அட்டை இருப்பதால் அவர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தோனேசிய அரசுத்தரப்பு, அகதிகள் இந்தோனேசியாவை வந்தடைய முயற்சிக்கவில்லை, அவர்கள் அவுஸ்திரேலியாவை அடையவே முயற்சித்துள்ளனர்’ என முன்பு தெரிவித்திருந்தது.
அகதிகள் மீண்டும் அவுஸ்திரேலியா செல்லும் நிலை ஏற்பட்டால் தமிழ் அகதிகள் தொடர்ந்து தவிக்கும் நிலை ஏற்படலாம் என எண்ணப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், லிபரல் கட்சி-லேபர் கட்சி இரண்டுமே அகதிகள் தொடர்பான பிரச்சினையில் பெரிய வித்தியாசங்களை கொண்டிருக்கவில்லை.
லேபர் கட்சி பொறுத்தமட்டில், இப்போது அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்வோம் என்கிறது.
அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளை அனுமதிக்க லிபரல் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் இப்போது தரையிறக்கப்பட்டுள்ள 44 அகதிகளின் எதிர்காலம் இந்தோனேசிய அரசின் முடிவு ஒட்டியே இருக்கிறது.