தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்கு எதிராக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகள் 3 பேரிடம், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நட்டஈடு கோரியுள்ளார்.
இவ்வாறு 500 மில்லியனை அவர் நட்ட ஈடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் துறைமுகத்தில் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இவ்வாறு தொழிற்சங்க சம்மேளம் தடையேற்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை துறைமுக பணியாளர்களினால் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் உள்ள கட்டிடம் ஒன்றில் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை துறைமுக பணியாளர்கள் சிலர் இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன், துறைமுக பணியாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு பிரதமர் தீர்வினை வழங்கியிருந்த போதும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது