பிரதமர் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை தர டெல்லி பல்கலைக்கழகம் மறுப்பு

சமீபத்தில் பிரதமர் மோடியின் பி.ஏ. பட்டப்படிப்புச் சான்றிதழ் விவரங்களை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்திடம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டம் கேட்டிருந்தார். ஆனால் பல்கலைக்கழகம் அதை தர மறுத்துவிட்டது. இதனை அடுத்து மோடி பட்டம் குறித்து கடும் சர்ச்சை ஏற்பட்டது.

10modi1

பிறகு மந்திரி அருண் ஜெட்லி மற்றும் அமித் ஷா ஆகியோர் மோடி பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை செய்தியாளர்கள் கூட்டத்தில் காண்பித்தார்கள். அதேபோல் டெல்லி பல்கலைக்கழகமும் பிரதமர் மோடியின் பி.ஏ. பட்டப் படிப்புச் சான்றிதழ் உண்மையானதுதான் என்றும், மோடி, கடந்த 1978-ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அவர் 1979-ஆம் ஆண்டு பட்டம் வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்தது. 

மோடியின் பி.ஏ. மதிப்பெண் சான்றிதழில், அவரது பெயர் “நரேந்திர குமார் தாமோதர்தாஸ் மோடி’ என்றும், எம்.ஏ. சான்றிதழில் “நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்றும் உள்ளது. அந்த சான்றிதழ் போலியானவை என்றும், அவற்றில் வேறுபாடுகள் உள்ளன என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் பி.ஏ., பட்டம் குறித்து டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் முகமத் இர்ஷாத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டார். இதற்கு பதிலளிக்க டெல்லி பல்கலை மறுத்து விட்டது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு மட்டுமே தகவல் தர முடியும் என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ”தகவல் அறியும் சட்டத்தின் கீழ் டெல்லி பல்கலைக்கழகம் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை வெளியிட அவரிடம் அனுமதி கேட்க வேண்டுமே தவிர, விண்ணப்பத்தை மறுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.