ஏ.எஸ்.எம்.ஜாவித்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் 23வது சிறார்த்தின நிகழ்வு இன்று (01) கொண்டாடப்பட்டது.
கொழும்பு-12 உயர் நீதி மன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் புதல்வரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்ட நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ரவி கருணாநாயக்க, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க, விஜயதாஸ ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக உள்ளிட்ட பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், பிரேமதாஸவின் துணைவியார் ஹேமா பிரேமதாஸ, அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுகள் சமயத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமானதுடன் அமரர் பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் சஜித் பிரேமதாஸ, திருமதி கேமா பிரேமதாஸ உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். இதன்போது உருவச்சிலைக்கான மலர் மாலையை கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அணுவித்தார்.
இதன்போது சுமார் மூவாயிரம் பேருக்கான வீட்டு உறுதிப் பத்திரங்கள், வீடமைப்புக் கடன்களுக்கான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி, பிரதமர், திருமதி கேமா பிரேமதாஸ அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.