ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
‘இம்போர்ட் மிரர்’ சமூக வலயத்தளத்தின் 6வது அகவையை முன்னிட்டு, ஊடகவியலாளர் செயலமர்வும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிறு காத்தான்குடி அஷ்ஷஹீட் அஹமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.
இம்போர்ட் மிறர் சமூக வலயத்தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் புனர்வாழ்வு மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் எச்.எம்.சபீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.பறக்கத்துல்லாஹ், உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட், சிரேஷ்ட அறிவிப்பாளரும், கல்விமானுமாகிய ஏ.ஆர்.எம். ஜிப்ரி உள்ளிட்ட உயரதிகாரிகள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளில் சிறந்த அறிவிப்பாளர்கள், சிறந்த ஊடகவியலாளர்கள், சிறந்த அரசியல்வாதிகள் எனத் தெரிவு செய்யப்டடவர்களுக்கு பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதளும், மேலாடையும் (ரி.சேட்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
‘இன்று ஊடகத்துறையிலே பல்வேறு விதமான முன்னேற்றகரமான புரட்சிகளை, சாதனைகளைப் புரிகின்ற ஒரு சாதனமாக இந்த சமூக வலயத் தளங்கள் செயற்படுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிந்தெடுத்ததில் அதிகமான பங்களிப்புக்களை இந்த இணையத்தளங்கள் செய்திருந்தன. இதனை நமது ஜனாதிபதியே அவரின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது தெரிவித்திருந்தார். இன்று அரசியல்வாதிகள், தலைமைகள் எல்லோரும் பயந்து பயந்து தமது கடமைகளைச் சரியாகச் செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறது இந்த வலயத்தளங்கள் என்றால் அது மிகையாகாது’ என்று தெரிவித்தார்.