முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

c.v. vigneswaran

 

வட மாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செயலாளர் எஸ்.பத்மநாதன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய நால்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சமஷ்டி ஆட்சி கோரி, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 12,13 மற்றும் 17ம் திகதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் குறித்து வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க,

“புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கடந்த ஏப்ரல் 22ம் திகதி வட மாகாண சபையில் பிரேரணை ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன் பிரதி முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜாவால் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பிரேரணையை அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்புவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், குறித்த பிரேரணைக்கு எதிராக சிலரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியையே நாம் கோரி நிற்கிறோம்.

நாட்டுக்குள் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும், இலங்கையில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் அந்தப் பிரேரணையில் உள்ளன என, குறிப்பிட்டார்.