எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் கிளிநொச்சி பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தமக்கு எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றிற்குள் பிரவேசித்திருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், இரா.சம்பந்தன் தனது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் பாதுகாப்புடன் சென்றமையினால் இராணுவ முகாமிலுள்ள இராணுவ பாதுகாப்பு அதிகாரி முகாமிற்குள் செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி கட்டளை தளபதி, வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மாஅதிபரிடம் கலந்துரையாடியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எனினும், கிளிநொச்சி கட்டளை தளபதியினால் இரா.சம்பந்தனுக்கு எதிராக எந்தவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
இராணுவ முகாமொன்றிற்குள் முன்னறிவித்தலுடனேயே பிரவேசிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னறிவித்தலுடன் பிரவேசித்திருக்கும் பட்சத்தில், தான் அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து கௌரவத்தையும் வழங்கியிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.