வறட்சியை சமாளிக்க உலக வங்கியிடம் ரூ.5000 கோடி கடன் கேட்கிறது மகாராஷ்டிர அரசு

drought_man_20090831_Fotor

 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான அணைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இதனை சமாளிக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளது.

இதுபற்றி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

வறட்சியை சமாளிக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக உலக வங்கியின் வறட்சி தணிப்பு நிதியில் இருந்து 5000 கோடி ரூபாய் கடன் ஒதுக்கீடு செய்யும்படி மாநில அரசு கேட்டுள்ளது. இதுகுறித்த திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது. இந்த உதவியால் மகாராஷ்டிர மாநிலத்தை வறட்சியில்லா மாநிலமாக மாற்ற உதவியாக இருக்கும்.

இது தொடர்பான நடைமுறைகள் முடிந்து கடன் தொகை வழங்குவதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த திட்டத்திற்கான கடன் தொகையை விரைவாக ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்.

இந்த திட்டத்தின்படி, வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாத்வாடாவில் இருந்து 3000 கிராமங்களையும், விதர்பாவில் இருந்து 2000 கிராமங்களையும் வறட்சி இல்லாத கிராமமாக உருவாக்க உலக வங்கி ஆதரவு அளிக்கும். உலக வங்கியின் கடன் மூலம், இந்த கிராமங்களில் தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்துவோம். பின்னர் வறட்சி பாதிப்பு அதிகம் உள்ள பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயம் குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.