டோனி,கோலியை போல் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை : உச்ச நீதிமன்றம்

kohli-dhoni-india-aus_Fotor

 

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பல்வேறு சிபாரிசுகளை செய்து இருந்தது. இதில் சில சிபாரிசுகளை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடந்து வருகிறது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “டோனி, விராட்கோலி போன்றவர்கள் கிரிக்கெட் விளையாடுவதால் பெரும் புகழுடன் விளங்குவதை பார்த்து நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் பலரும் கிரிக்கெட் ஆட்டத்தை தங்களது வாழ்க்கையின் அங்கமாக்க விரும்புகிறார்கள். 

அந்த இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சரியான பக்கத்தில் இருக்காவிட்டால் அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதில்லை. சில நேரங்களில் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிக்கும் நபர்களால் தடுக்கப்படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் முழு சர்வதிகாரத்துடன் செயல்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அனுசரணையாக இல்லை என்றால் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாட விரும்பினாலும், கிரிக்கெட் விளையாட முடியாது. ஒருவர் கிரிக்கெட் வாரியத்தில் உறுப்பினர் ஆக நினைத்தாலும் முடியாது”  என கடுமையாக சாடினார்கள்.