ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (நவோதையப் பாடசாலை) பழைய மாணவர் சங்கம் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளில் ஒன்று கூடல் ஒன்றினை கடந்த சனிக்கிழமை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எஸ். செல்வரஞ்சன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும், விஷேட பேச்சாளராக ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் ஏ.சி.அகார் முஹமட் ஆகியோருடன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.எஸ்.எம். அபுபக்கர், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப்பாவா பாறுக், ஹூனைஸ் பாறுக், மன்னார் மாவட்ட முன்னாள் அரச அதிபரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகருமான பழையமாணவர் எஸ். மரியதாசன் குரூஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி ஜேசுதாஸன், இலங்கைக்கான ஈரான் நாட்டின் பிரதிநிதிகள், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், புரவலர் ஹசிம் உமர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், பாடசாலையில் கல்வி பயின்று இன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல் துறைகளிலும் இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் ஆரம்பகால பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த வருடம் கஇபொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு எருக்கலம்பிட்டி மறுமலர்ச்சி முன்னணியினால் கல்விக்கான உதவு தொகைகள் வழங்கப்பட்டதுடன் சங்கத்தின் நினைவு மலரும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.