நண்பர் ஒருவர் அண்மையில் நகைச்சுவையாக கூறியிருந்தார், வடையும் கிழங்கும் விற்பவர்கள் எல்லாம் வடக்கையும் கிழக்கையும் பற்றிப் பேசுகிறார்கள் என்று.
ஆனால் பேச வேண்டியவர்கள் பேசுகிறார்களில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை முன் வைத்ததாக தெரியவில்லை.
மற்ற இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை இந்த வாரம் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
வடமாகாண சபை முன்மொழிந்த ஏற்பாட்டில் தமக்கு உடன்பாடில்லை என்று அவர்கள் தெரிவித்து விட்டனர். இது பற்றி மு. கா இதுவரையில் ஒன்றும் சொல்லவில்லை.
வட மாகாண சபை முஸ்லிம்களுக்குத் தீர்வு சொல்வது ஏற்புடையதாகாது என்பது பாமரனுக்கும் புரிகிற சாதாரண விடயம்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமா என்பது பற்றி, வடக்கு அரசியல்வாதிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது, கிழக்கு மக்களுக்குச் செய்யும் அநியாயமாகும். இது பற்றி முடிவெடுக்க வேண்டியது கிழக்கிலுள்ள அரசியல்வாதிகளுமல்ல.
கிழக்கு மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அவர்கள் வடக்குடன் இணைய விரும்புகிறார்களா என்பது அறியப்பட வேண்டும். இது கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களிடமும், தமிழ் மக்களிடமும் தனித்தனியாக அறியப்படுதல் வேண்டும். இதில் பின்வரும் தேர்வுகளில் சிந்திக்கப் படுதல் வேண்டும்.
முதலாவதாக, அவ்வாறு இணைவதற்கு கிழக்கு தமிழர்களும், கிழக்கு முஸ்லிம்களும் விரும்புகிறார்களெனில், அந்த இணைவில் கிழக்கு மற்றும் வடக்கு முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றி , அவர்கள் எவ்வாறான ஏற்பாட்டை விரும்புகிறார்கள் என்பது பற்றி தனியாக அறியப்படல் வேண்டும். இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் சேர்ந்து ஒரு நிறுவனமாக இயங்குவதா அல்லது இணைந்த வட கிழக்கிற்குள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமென தனித்தனியாக இரண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமா?
இரண்டாவதாக, வடக்குடன் இணைவதற்கு தமிழர்கள் விரும்பி, முஸ்லிம்கள் விரும்பாதவிடத்து, வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு ஏற்பாட்டை முஸ்லிம்களுக்கு செய்து கொடுத்து விட்டு, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் இணந்து தங்களுக்கு ஒரு தனி நிர்வாகத்தை ஏற்படுத்துவது.
மூன்றாவதாக, வடக்குடன் இணைவதற்கு கிழக்கிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் விரும்பாதவிடத்து, வடக்குத் தமிழர்களுக்குத் தனியாகவும், கிழக்குத் தமிழர்களுக்குத் தனியாகவும், வடக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு தனி நிர்வாகம் சாத்தியமில்லாததால், (அவர்களின் சனத்தொகை அடிப்படையில்) வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்குத் தனியாகவுமென மூன்று நிர்வாகங்கள் ஏற்படுத்தப் படல் வேண்டும்.
இதை இன்னும் விரிவாக சிந்தித்து ஆழமாக அணுகி ஒரு சிறந்த ஏற்பாட்டை மக்கள் அபிப்பிராயத்துடன் நிறைவேற்றுவதன்றி அரசியல்வாதிகளின் தங்களது தேவைக்கு ஏற்றாற்போல் செய்வது அல்ல.
அரசியல் கட்சிகள் தங்களது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கும் நோக்குடனும், தங்கள் கட்சி நலனை முன்னிலைப்படுத்தியும் வரையும் தீர்வுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.
எது எவ்வாறாயினும் தமிழ் தரப்பிற்குக் கொடுக்கப்படுவதில் எள்ளளவும் குறைவான அதிகாரங்களை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள்தான் போராடினோம். நாங்கள்தான் இழப்புகளைச் சந்தித்தோம் என்று விதண்டாவாதம் செய்து முஸ்லிம்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட தமிழ் அரசியல்வாதிகள் முன்வராவிட்டால், இது இன்னும் காலதாமதவதை தவிர்க்கவொண்ணாது.
அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்