பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – றிசாத் தெரிவிப்பு

 

13023559_583168961849153_260168971_n_Fotor 

 

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016)  மாலை தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு இடிபாடுகளுக்கு மத்தியில் கிடக்கும் தொழிற்சாலை கட்டிடங்களையும், அழிந்து போயிருக்கும் இயந்திரங்களையும் பார்வையிட்டார்.

யுத்தத்தின் காரணமாக சுமார் 16 வருட காலமாக மூடிக் கிடக்கும் இந்தத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, தான் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும், இந்த முயற்சிக்கு ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

227 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தொழிற்சாலைப் பிரதேசம், இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வளமான சொத்து எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

13090092_583168948515821_84568228_n_Fotor

 

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கடந்த இரண்டு தசாப்தங்களாக மூடப்பட்டு கிடப்பதால், வெளிநாடுகளிலிருந்து குளோரினை இறக்குமதி செய்வதற்கு பெருமளவு அந்நியச்செலாவணி செலவழிக்கப்படுகின்றது. எனவே, உள்ளூரில் குளோரினை உற்பத்தி செய்வதன் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் தொழிற்சாலை பிரதேசத்தில் மரக்கன்றுகளை நாட்டி, சுற்றாடலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், குறிப்பிட்ட பரப்பளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.