கொழும்பு நகரில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை அவசரமாக விற்பனை செய்வதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு சொந்தமான காணிகளை அவசரமாக விற்பனை செய்ய வேண்டாம். அந்த காணிகளை அப்படியே வைத்திருங்கள். அடுத்த ஓரிரு வருடங்களில் சிறந்த விலைக்கு அவற்றை விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் பிரதான நகரங்களை உருவாக்கும் எதிர்கால திட்டத்தின் கீழ் கொழும்பு நகரும், மேல் மாகாணமும் நிதி மற்றும் வர்த்தக கேந்திர நிலையங்களாக இருக்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுவது முதலீட்டாளர்களுக்கு பாரிய பலமாகும். தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலை இல்லை.கொள்கை அடிப்படையில் இருந்து எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.
நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் மத பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலைபெற்று அமைதி நிலவும் போது தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.
இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களிடம் நல்ல பண புழக்கம் காணப்பட்டதாகவும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியுள்ளதை இது காட்டுகிறது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.