சுஐப் எம்.காசிம்.
வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் அமைப்பு வரைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில்லை எனவும், ஆனால் எந்தவொரு வரைவையும் தயாரிப்பதற்கு வடமாகாண சபைக்கும், எந்த ஒரு கட்சிக்கும் உரிமை உண்டு எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்
வவுனியா நெலுங்குளத்தில் இன்று (24/04/2016) காலை 317வது லங்கா சதொச கிளையை அங்குரார்ப்பணம் செய்துவைத்த பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் திட்ட வரைவு குறித்து அமைச்சரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு கூறியதாவது,
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு, கிழக்கு நிபந்தனையுடன் இணைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்தவரிடமோ, வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடமோ எந்தக் கருத்தும் பெறப்படவில்லை. அதற்கு அந்த மக்கள் அங்கீகாரம் வழங்கவுமில்லை, பின்னர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வடக்கும், கிழக்கும் வேறாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றது. தற்போதைய ஏற்பாடு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுதியான நிலைப்பாடாகும்.
வடமாகாண சபையின் அரசியல் திட்ட முன்மொழிவு வரைவில், மலையக மக்களுக்கு என்ன வழங்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எத்தகைய ஏற்பாடு இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு என்ன தீர்வு வேண்டுமெனக் கூறுவதற்கு வடமாகாண சபைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து, அந்த சமூகத்தின் அரசியல் தலைமைகள், சிவில் சமூகத்தவர், புத்தி ஜீவிகள் கூடி முடிவெடுப்பர். வடமாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த, முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும், வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள சமூகத்தவர் ஒருவரும், மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருமாக, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். எனினும் வடமாகாண சபை இந்தப் பிரேரணை தொடர்பில், எம்மிடம் பேரளவுக்காவது கலந்தாலோசனை செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அந்த மக்களின் ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இந்த உறுப்பினரிடம் கருத்துக் கேட்காமல், தனது தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை வருத்தமான விடயமே.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களையும், வடக்குக், கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் பெரும்பாலான உறுப்பினர்களையும், மாககாண சபைகளில் உறுப்பினர்களையும் கொண்ட ஓர் அரசியல் கட்சி. எனவே, அரசியல் திட்ட முன்மொழிவொன்றின் இறுதி வடிவம் ஒன்றை நாம் தயாரித்துள்ளோம். அது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமும் கலந்தாலோசனை செய்து, அந்த வரைவை இன்னும் முழுமைப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
அதுமட்டுமன்றி எமது கட்சியின் வரைவை அடிப்படையாக வைத்து, சிறுபான்மை கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இபிடிபி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றுடனும், பிற கட்சிகளான ஜே.வி.பி, ஹெல உறுமய போன்ற கட்சிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளோம், அதன் மூலம் சிறுபான்மை, சிறு கட்சிகளுக்கு அரசியல் அமைப்புத் திட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என அமைச்சர் கூறினார்.