முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சிப்போரால் பாராளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவினையாவது திரட்டிக் காட்ட முடியுமா? என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மஹிந்த ஆதரவு குழுவினருக்கு சவால் விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சிப்போரால்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவிற்கு செல்வதனை தேசத் துரோகமாக கருதிய மஹிந்த ஆதரவு குழுவினர் ஊழல் மோசடி செய்தோரை கைது செய்தமைக்காக தற்போது ஜெனிவா செல்ல நினைப்பது தேசதுரோகம் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்படும் எனவும் அவர் குறி்ப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது ஊழல் மோசடி செய்தோரை கைது செய்வது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பரவலாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்த்து ஜெனிவா மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்போவதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இந்த கருத்து மிகவும் நகைப்புகுரியதாகும். முன்னைய ஆட்சிக்காலத்தின் போது மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஜெனிவா சென்று தேசத்துரோக செயலில் ஈடுப்படுவதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் தற்போது நாட்டு மக்களின் பணங்களை சூறையாடியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிராக ஜெனிவா செல்ல போவதாக மஹிந்த ஆதரவு குழுவினர் எச்சரிக்கின்றனர்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் ஜெனிவா சென்றமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த தருணத்தில் தேசத்துரோக பழி சுமத்தினர். அவ்வாறாயின் ஊழலுக்கு எதிராக மஹிந்த ஆதரவு குழுவினர் ஜெனிவா செல்ல் தயாராகுவது தேசதுரோகம் இல்லையா?
ஆகவே தற்போது முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர். நாட்டு மக்களின் பணத்தை சூரையாடியவர்களின் முயற்சிகள் எதுவுமே பழிக்க போவதில்லை. தேர்தலின் போது மக்கள் இந்த குழுவினருக்கு தகுந்த பதிலடியினை வழங்குவார்கள்.
இதேவேளை மஹிந்த ஆதரவு குழுவினர் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளனர்.அதன் காரணமாகவே மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நோக்குடன் இந்த குழுவினர் நாடு பூராகவும் சென்று் பொது கூட்டங்களை நடத்துகின்றனர். மஹிந்த ஆதரவு கூட்டணியின் பிரசார கூட்டங்கள் அனைத்திலும் மக்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியை மீள கொண்டு வரும் வகையிலேயே செயற்படுகின்றனர்.
முன்னைய ஆட்சியின் போது எந்தவொரு சலுகையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களின் பணங்கள் சூறையாடப்பட்டது. அவ்வாறான யுகத்தை மீள கொண்டு வரவே இக்குழுவினர் முயற்சிக்கின்றனர். இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இது நிராசையான கனவாகும். அது எந்த தருணத்திலும் நிறைவேற போவதில்லை.
முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முடியுமாயின் மஹிந்த ஆதரவு குழுவினர் பாராளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவினை திரட்டி காண்பிக்க வேண்டும்.
இதேவேளை தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக எச்சரிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கை ஜனவரி 8 ஆம் திகதியே இழந்துவிட்டனர்.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது. இளைஞர்களுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் செய்வதற்கு பெரும்பான்மை பலமற்ற பிரதிநதித்துவத்தை கொண்ட அரசாங்கத்தை பெரும்பான்மை ஆக்கவேண்டும். ஆகவே அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது. அத்தோடு மக்களி்ன் ஆணையின் பிரகாரம் பாராளுமன்றம வெகு விரைவில் கலைக்கப்படும் என்றார்.