ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் MP கடிதம் எழுதியுள்ளார்

sritharan

 

ஜனநாயகத்தின் நான்காம் தூணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் சட்டத்திற்கு முரணாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவம் இராணுவ அதிகாரிகளின் ஆட்களினால் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தின் பிரதான வெளிப்பாடாக ஊடக சுதந்திரம் மிளிர்கின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகத் துறை மீது மேற்கொள்ளப்பட்ட சர்வாதிகார செயல்களில் இருந்து மீண்டு, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரம் செய்யப்படவேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை உரிய அதிகாரிகள் சரிவர கடைப்பிடிக்காதவரை நல்லாட்சியின் பிரதிபலிப்புக்களை மக்கள் உணரப்போவதில்லை.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் உண்மையானதும், உடனடியானதுமான விசாரணை ஒன்றை நடத்த நடவடிக்கை எடுப்பீர்கள் என இக்கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.