ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்

murugan santhan perar

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க கால தாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. 

இதைத்தொடர்ந்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. 

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

பின்னர் 2014 ஏப்ரல் 24-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இறுதி முடிவு செய்யும் என்று தீர்ப்பு அளித்தார். அந்த அமர்வு, இந்த வழக்கு குறித்த 7 அம்சங்களை கருத்தில் கொண்டு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல் அமர்வு அமைக்கப்பட்டது. 

இந்த 7 அம்சங்களையும் தெளிவுபடுத்தி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும் ராஜீவ் கொலைக்கைதிகள் 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனியாக விசாரிக்கும் என்றும் தெரிவித்தது. 

அதன்படி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழக்கை விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. எனினும் யாருடைய தலைமையிலான அமர்வு என்பதும், எப்போது முதல் விசாரணை தொடங்கும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.