சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துளது.
தேசிய முஸ்லிம் கவுன்சிலின் மீயுயர் சபைக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதன் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கவுன்சிலின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவிக்கையில்;
“2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உயிர், உடமை, வீடுகள் என பாரிய அழிவுகள் ஏற்பட்டன. இதனால் வீடு, வாசல்களை இழந்து நிர்க்கதியான குடும்பங்களுக்கு 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
எனினும் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அம்பாறை, தீகவாபி சிங்கள மக்களுக்கும் இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டதுடன் அது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிரகாரம் இன விகிதாசார அடிப்படையில் அவ்வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சர்ச்சை காரணமாக அவ்வீடுகள் 10 வருடங்களாகியும் இன்னும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல், அவை உடைந்து சேதமடைந்து, அப்பகுதி பற்றைக்காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளும் ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்தில் கைகோர்த்துக் கொண்டு பங்காளிக் கட்சிகளாக இருந்து வருகின்ற போதிலும் இது விடயத்தில் சமரச தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
ஆகையினால் இது விடயத்தில் இனியும் காலம் இழுத்தடிப்புச் செய்ய இடமளிக்க முடியாது. இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினர், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைமைகள் போன்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நியாயமான தீர்வை எட்டும் பொருட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் எமது தேசிய முஸ்லிம் கவுன்சில் மீயுயர் சபை கூடி விரிவாக ஆராய்ந்துள்ளது” என்றார்.
இதில் கவுன்சில் செயலாளர் நாயகம் செயிட் அஸ்லம் மௌலானா, தேசிய அமைப்பாளர் எம்.எச்.முஸ்தாக் முஹம்மட், பொருளாளர் எஸ்.எம்.கலீல் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.