நபரொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட எட்டுப் பேருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, ஹிருணிகா உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, நீதிமன்றத்தில் பொலிஸாரால் தெரியப்படுத்தப்பட்டது.
இதன்படி, சட்டமா அதிபரின் அறிவுரை கிடைக்கப் பெற்றதன் பின்னர் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, பொலிஸாரால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றையதினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.