அரசியல் பழிவாங்கல் எனும் போர்வையில் 300 பேருக்கு கல்வித்துறையில் முறைகேடான நியமனம்

அஸ்லம் எஸ்.மௌலானா
அரசியல் பழிவாங்கலுக்குற்பட்டவர்கள் எனும் போர்வையில் சுமார் 300 பேருக்கு கல்வித்துறையில் நியமனங்கள் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கையை அரசாங்கம் கைவிடா விட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தயாராகி வருகின்றது என அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
Josep Stalin
“இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை உள்ளிட்ட அனைத்து கல்வித்துறைசார் யாப்பு விதிகளையும் மீறியே இந்நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான நியமனங்கள் கல்வித்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அந்த நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்காக கல்வித்துறைசார் 12 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
எமது எதிர்ப்பையும் மீறி இந்த நல்லாட்சி அரசாங்கம் குறித்த நியமனங்களை வழங்க முற்படுமாயின் நீதிமன்றத்தின் ஊடாக அதனை சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.