மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டி ?

04-1441334652-kushboo54778_Fotor

 

சென்னை மயிலாபூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை போலீஸ் அதிகாரியாக இருந்த போது அவர் வசித்துள்ளார்.

பணி ஓய்வு பெற்ற பின்னர், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி. சேர்மனாகவும் நட்ராஜ் இருந்துள்ளார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

ஓய்வு பெற்ற போலீஸ் ஒருவர், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் மூலம் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி சார்பில் இத்தொகுதியில் களம் இறங்கப்போவது யார்? என்கிற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சினிமாவில் கொடிகட்டி பறந்த அவர் அரசியல் களத்திலும் கால்பதித்து, பரபரப்பாகவே இயங்கி வருகிறார். தி.மு.கவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இதன் பின்னர், அவர் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அ.தி.மு.க. வேட்பாளரான நட்ராஜ் தெரிந்த முகமாக இருப்பதால் அவரை எதிர்த்து பிரபலமான ஒருவரை களமிறக்கினால் மட்டுமே கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என்று தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் கருதுகின்றனர்.

எனவே குஷ்புவை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வைத்தால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். குஷ்புவின் வீடும் மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சாந்தோமிலேயே உள்ளது.

இதுபற்றி குஷ்புவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதி உள்ளிட்ட பல தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நிச்சமாக தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.