ஒலுவில் கூட்டச் செய்தி குறித்து முன்னாள் தவிசாளர் அன்சிலின் ஆதங்கம்

கடந்த 03/04/2016 ஞாயிற்றுக்கிழமை எமது இணையத்தில் வெளியிடப்பட்ட “ஊடகவியலாளர்கள் மீது ஹக்கீம் மீண்டும் பாய்ச்சல் , பழில் BA கெட் அவுட் ” என்ற செய்தி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுச் செயலாளரும் , இம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் சிறந்த அரசியல் வாதியும் , ஊடகவியலாளர்களை எப்போதும் கண்ணியபப்டுத்தும் சிறந்த வாசகனுமாகிய அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ. அன்ஸில் தனது முக நூலூடாக மறுப்பறிக்கை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார் , அதனை நாம் இங்கு நேயர்களுக்கு முழுமையாக தருகின்றோம் .

 

 ஊடக தர்மம்??

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் தொகுதியைச் சேர்ந்த அம்பாரை மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் பேசும்போது,
முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்கள் தேவையில்லை எனவும் தேசியப் பட்டியல் பா.உ கேட்பவர்கள் அமைச்சர் றிசாத்துடன் இணைந்துகொள்ளுங்கள் எனவும் கூறியதாக சில இணையத் தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததனை என்னால் அவதானிக்க முடிந்தது.

குறித்த கூட்டத்திற்கு, செயலாளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தவன் நான். 
ஊடகவியலாளராக நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

மாவட்டக் குழுவின் உறுப்பினராக இருக்கும் ஊடகவியலாளர்கள், மாவட்டக் குழுவின் உறுப்பினராகவே தவிர ஊடகவியலாளராக அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அக்கூட்டத்தில் தமது ஊடகவியலாளர்களை பங்கேற்கச் செய்யாத Lankafrontnews, Thalamnews ஆகிய செய்தி இணையதளங்கள் எவ்வாறு அங்கு நடந்த விடயம் தொடர்பான செய்தியை வெளியிட முடியும்?

அவர்களது ஊடகவியலாளர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பின் அழைக்கப்படாத கட்சி ஒன்றின் உள்ளக கூட்டத்தில் கலந்து கொள்வது எப்படி அவர்களுக்கு நாகரிகமாகும்.

அப்படித்தான் நாகரிகமற்று கலந்து கொண்டிருந்தால்கூட அங்கு என்ன நடந்ததோ அதனைத்தானே எழுதியிருக்கவேண்டும்.

நடக்காத, அறவே பேசாத விடயங்களை அண்டப் புழுகாக மக்கள் முன் ஒப்புவித்தால் அதனை என்னவென்றுரைப்பது. 
முன்விரோதம்…?
கூலிக்கு மாரடித்தல்..?
வஞ்சகம்…?
சதிக்கூட்டில் பங்காளி…?
எதிர்பார்ப்பு கிட்டவில்லை..?
இதில் எவ்வாறும் கொள்ளமுடியும்.

உண்மையிலேயே ஒரு ஊடகவியலாளன் அக்கூட்டத்தில் பபங்கேற்றிருந்தால் அவனுக்கு எது செய்தியாக இருந்திருக்க வேண்டும்?

செயலாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டதான சர்ச்சையுள்ள ஒரு நிலையில், செயலாளர் நாயகத்தின் சகோதரர் கூட கலந்துகொண்ட அக்கூட்டத்தில் குறைக்கப்பட்ட அதிகாரங்களை மீள அவருக்கு வழங்க வேண்டுமென ஒருவர்கூட அங்கு வலியுறுத்தவில்லை என்பதும், 

பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியானது என ஏகமனதாக ஒருவர்கூட மறுதலிக்காத நிலையில் மீள வலியுறுத்தப்பட்டதும்தானே செய்தியாக இருந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் எனது இப்பதிவையாவது அவர்களது செய்திக்கு மறுப்பாக பிரசுரிப்பார்களானால் அவர்களிடத்தில் அரிதாகவேனும் ஊடக தர்மம் உயிர் வாழ்கிறது என நம்பலாம்.

இவற்றுக்கெல்லாம் இடையில் இன்று ஒரு சந்தோசம். நான் அதே கூட்டத்தில் பேசியதான ஒரு செய்தியை பிரசுரிப்பதற்கு முன் Madawalanews
செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அது நான் பேசியதுதானா என்பதை என்னிடம் தொலைபேசியூடாக உறுதிப்படுத்திக்கொண்டார்.

இப்படியாக ஊடக தர்மம் பேணி செய்தி இணையதளங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவோமா..?

எம்.ஏ. அன்ஸில்
அம்பாரை மாவட்டக் குழுச் செயலாளர் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

ஆசிரியர் குறிப்பு ,

1) கெட் அவுட் சொன்னவர் இன்னும் வாய் திறக்கவில்லை

2) கெட் அவுட் என்ற சொல்லுக்கு ஆளான பழில் BA இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இது பற்றி மூச்சு விடவில்லை.

3) இன்ஷா அல்லாஹ் இச் சொற் பிரயோகங்களின் உண்மைத் தன்மை , பெறுமானம் என்பவற்றை சமூகம் அறிந்து கொள்ளும் போது செயலாளர் அன்சில் அவர்களின் மறுப்பறிப்பு கட்டமைப்பை மக்கள் ஜீரணித்தார்களா ? அல்லது புறக்கணித்தார்களா? என்பதை காலம் விரைவில் சொல்லும்.

4) எய்தவரும் , எய்யப்பட்டவரும் மௌனியான நிலையில் நமது மதிப்புக்குரிய அன்சில் அவர்களின் நன்மதிப்பைக் கருத்திற்க் கொண்டு மூன்றாம் பாத்திரமான இவரின் அறிக்கையை தாராளமாக பதிவேற்றியுள்ளோம் .

5) தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்