தி.மு.க. தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு இறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் ரொம்ப மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்து 2-வது முறையாக பேசினோம். தி.மு.க. இளம் தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் செய்து கொண்டோம்.
இந்த தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நான் உறுதியாக சொல்கிறேன். அகில இந்திய அளவில் சோனியாகாந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலும் ஆட்சி அமையப்போவது உறுதி.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க., தி.மு.க.தான் மாறிமாறி ஆட்சி அமைத்து வந்துள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. கடந்த பல ஆண்டுகளாக 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததில்லை. எனவே இந்த முறை, தி.மு.க. முறை. கருணாநிதி தலைமையில் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சி அமைய காங்கிரஸ் இணைந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, எத்தனைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு, 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
குலாம்நபி ஆசாத் சொன்னது போல, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறக்கூடிய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை விரட்டியடிப்பதற்கு, அந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு, நிச்சயமாக தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கக்கூடிய இந்த கூட்டணி அதனை சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப இருக்கிறது.
ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், இன்று (நேற்று) மாலையில் இருந்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவும், காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவும் கூடி எந்தெந்த தொகுதிகளில் யார்? யார்? போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தைத் தொடங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமணர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் 3,001 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் நேற்று இணைந்தனர். இந்த நிகழ்வின்போது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்திற்கான விடியல் விரைவில் கிடைக்க உள்ளது. மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். தி.மு.க. ஆட்சியை கொண்டு வர மக்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு கூட்டணி கட்சிகளிடம் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்த கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வின் வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.