முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த பிறகு டெல்லியில் அவர் தங்கி இருந்த இல்லத்தில் இருந்து அவருடைய பொருட்கள் ராமேசுவரத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து கலாமின் பொருட்களை எடுத்து வந்து டெல்லியில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக டெல்லி கலாசார மந்திரி கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது:-
அப்துல் கலாம் இறந்த பிறகு அவருடைய பொருட்களை மத்திய அரசு ராமேசுவரத்துக்கு அனுப்பி விட்டது. நான் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த பொருட்களை கொண்டு வருவதற்காக ராமேசுவரம் செல்ல இருக்கிறேன். கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகள், மூக்கு கண்ணாடிகள் போன்ற அவருடைய பொருட்கள் அனைத்தையும் லாரி மூலம் டெல்லிக்கு எடுத்து வர இருக்கிறோம்.
அவை அனைத்தும் டெல்லி சட்டசபைக்கு கொண்டு வரப்படும். பின்னர் டெல்லியில் உள்ள தில்லி ஹாட் மார்க்கெட் பகுதியில் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் கட்டப்பட்டு அவருடைய பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.