முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர் குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து இன்று கேகாலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர் கடசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதேவேளை தேர்தலின் பின்னர் குமார் குணரட்னம் என்பவர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருப்பதாக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வேளை, அவரை நாட்டில் இருந்து வௌியேற்றக் கூடாது என, முன்னிலை சோசலிசக் கட்சியால் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி அவரை நாட்டில் இருந்து வௌியேற்ற முடியும் என குறிப்பிட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமார் குணரட்னம் கடந்த நவம்பர் 4ம் திகதி கேகாலை – அகுருகெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது