எம்.பி.க்களுக்கு 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் வழங்க முடியுமாயின் ஊடகவியலாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்க தயக்கம் ஏன்?

அஸ்லம் எஸ்.மௌலானா
ஏற்கனவே உறுதியாக்கப்பட்டதன் பிரகாரம் ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோதே இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Nizam
இப்பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் கூறியதாவது;
“கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு முற்றிலும் தீர்வையற்ற முறையில் சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக ஊடக அமைச்சு விண்ணப்பங்களை கோரியிருந்தது. இதற்காக மிகவும் ஆவலுடன் விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் அது தொடர்பிலான விடயங்களுக்காக பெரும் செலவுடன் பல தடவைகள் கொழும்பு சென்று ஊடக அமைச்சு கோரியிருந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருந்தனர்.
இப்படி பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு தற்போது பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது. வட்டியுடன் மீளச்செலுத்தும் வகையில் 250000 ரூபா வரை வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஊடக அமைச்சு அறிவித்துள்ளமை அவர்களை பெரும் கவலையடைய செய்துள்ளது. அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் என்னை சந்தித்து கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இப்பிரேரணையை கொண்டு வந்துள்ளேன். 
இம்முறை பட்ஜெட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளுக்கான தீர்வையற்ற வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா வரையிலான தீர்வையற்ற வாகனங்களை வழங்குவதற்கு அராங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறாயின் ஊடகவியலாளர்களுக்கு மிகக் குறைந்த விலையிலான மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்காக ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் பெரும் பங்களிப்பு செய்திருந்தனர் என்பதை எவரும் மறந்து விட முடியாது” என்று குறிப்பிட்டார்.
முதல்வரின் இந்த பிரேரணை மீது உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஊடக அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளருக்கு முதல்வர் பணிப்புரை விடுத்தார்.