எந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடந்தாலும் அதற்கு முகம்கொடுக்கத் தயாராகுமாறு எமது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதால் கல்முனைத் தொகுதியில் கட்சியப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு என ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரசாரச் செயலாளரும் முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை கட்சியின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“அரசாங்கத்திற்கெதிராக செயல்படும் மாற்றுக் கட்சிகளின் தலைவர்கள் நல்லாட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு எத்தனித்து வருகிறார்கள். சர்வதிகாரமிக்க குடும்ப ஆட்சியின் கோரப்பிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்து, மிகவும் சிறப்பான ஆட்சி ஒன்றை நாடு கண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதனைப் பொறுக்க முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகள் இந்த நல்லாட்சி மக்களுக்கு எதையும் செய்யாது என்று சொல்லி திசைதிருப்ப பார்க்கிறார்கள். இதற்கு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.
மஹிந்த அரசால் நாட்டு மக்கள் பட்ட கஷ்டம், துன்பங்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நாட்டை குட்டிச்சுவராக்கிய மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் நாட்டை என்னிடம் தாருங்கள எனக்கேட்கின்றார் என்றால் அது எவ்வளவு கேவலமான செயல் என்று சிந்திக்க வேண்டும். தமது திருட்டுத்தனங்களை மூடி மறைப்பதற்கே இந்த சித்து விளையாட்டுகளை மஹிந்த தரப்பினர் அரங்கேற்றுகின்றனர்.
நல்லாட்சி அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. சிங்கள மக்களும் இந்த நல்லாட்சியை வரவேற்கின்றனர். இவை சிங்கள பேரினவாதிகளுக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயங்களாகும். இந்த நல்லாட்சி சிறப்பாக செயற்பட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும்.
எமது பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்து வருகின்ற ஆதரவை தக்கவைப்பதுடன் மேலும் அங்கத்தவர்களை இணைத்து, கட்சியை இன்னும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டு, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது தொடர்பிலான அறிவுறுத்தல்களை கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு வழங்கியுள்ளார்” என்றார்.