சர்வதேச உண்மைகளைக் கண்டறிவதற்கு காணப்படுகின்ற உரிமைகள் தொடர்பான தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே பான் கீ மூன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
உண்மை , நீதி, பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு நாடுகள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதும் அவசியம் எனவும் பான் கீ மூன் வலியுறுத்தியிருக்கிறார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதில் மேலும் தெரிவித்திருக்கின்றதாவது:-
உலகில் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் அவருக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு முழுமையான உரிமை காணப்படுகின்றது. அதேநேரம் அந்த உண்மையானது ஏனைய சமூகங்களுக்கும் கூறப்படவேண்டியது அவசியமாகும்.
அதாவது இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்காக இந்த உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமையானது நீதிக்கான உரிமையுடன் மிகவும் நெருங்கிக்காணப்படுகின்றது.
அதற்காக ஐக்கிய நாடுகள் சபை உண்மையைக் கண்டறியும் செயற்பாடுகள், விசாரணை ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் என்பற்றுக்கு ஐக்கியநாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
உதாரணமாக கம்போடியா, டுனிஷியா, மாலி, தென்சூடான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் இடம்பெறும் நேர்மையான கலந்துரையாடல்கள், மற்றும் பாதிக்கப்பட்டவருடனான ஆலோசனைகளுக்கு ஐ.நா. ஆதரவை வழங்குகிறது.
நீதி வழங்கும் செயற்பாட்டிலும் நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொடர்பு பட்ட தரப்புக்களின் அர்த்தமுள்ள பங்களிப்புகள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். சாட்சியாளர்கள் வழங்கும் சாட்சியங்கள், பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்களின் சுயகௌரவம், தனிப்பட்ட தன்மை, மற்றும் உடலியல் ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் பொருத்தமான பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும். அதுமட்டுமன்றி மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.