துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ்பிரயோகங்களை முடிவிற்குகொண்டு வரமுடியும் !

NFGG-Logo_Fotor

 

விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறை கொண்ட துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ் பிரயோகங்களை முடிவிற்குகொண்டு வரமுடியும்’  NFGG மகளிர் பிரிவு.

‘மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டு வரமுடியும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.

பத்து வயது சிறுமியொருவர் தனது சிறிய தாயாரினால் கடந்த மூன்று வருடங்களாக சூடு வைக்கப்பட்டு, சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுவந்த சம்பவம் கடந்த சில தினங்களாக காத்தான்குடி பிரதேசத்தில் பிரதான பேசு பொருளாக மாறியிருக்கின்றது. இது  தொடர்பில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(Nகுபுபு) யின் மகளிர் பிரிவு தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,. 

‘பண்பாடான நாகரீகப்பின்னணிகளும் வளர்ச்சியடைந்த சமூகக்கட்டமைப்புகளும் கொண்ட பிரதேசமாக கருதப்படும்காத்தான்குடியில்  இவ்வாறான துரதிஷ்டவசமான, பிற்போக்கான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதானது உண்மையில் எம்மை மிகுந்தஅதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான சிறுவர்மீதான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியதுகட்டாயமாகும். எனினும் இவ்வாறான சம்பவங்கள் இன்று நாடளாவிய ரீதியிலும் பிரதேச மட்டங்களிலும் நாளாந்தம் அதிகரித்துவருகின்றமை கண்கூடாகும். இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இது தொடர்பான விழிப்புணர்வு சமூகத்திலுள்ளஒவ்வொருவரிடத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும்.

குறித்த சிறுமியின்  மீது மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்வன்முறைச் சம்பவமானது, கடந்த மூன்று ஆண்டுகளாக இடம்பெற்று வந்திருந்தபோதிலும் இதனை வெளிக்கொணர்வதற்கு இத்தனை ஆண்டுகளாக எவருமே முன்வராமற் போனது, இது தொடர்பானவிழிப்புணர்வின்மையை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்த்து சிறுமியைக் காப்பாற்றும் சமூக அக்கறையுடன் செயற்பட பலரும்தயங்கியமையையே உணர்த்துகின்றது.  

எனினும் இப்பொழுது இச்சம்பவத்தினை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்த அனைவரும் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களாகும் .அத்துடன் இப்பிரச்சனையினையின் பாரதூரத்தினை உடனடியாக அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்தஊடகங்கள், அழுத்தங்களுக்கு அடிபணியாது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பொலீசார் மற்றும் நீதித்துறையினரும்பாராட்டப்பட வேண்டியவர்களேயாகும். 

எனவே இச்சம்பவம் தொடர்பாக நடாத்தப்படவுள்ள விசாரணைகள் மிக நீதியான முறையில் நடாத்தப்பட்டு குற்றவாளிகளுக்குதண்டனைகள் விரைவாக வழங்கப்படவேண்டும். இதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சாத்வீகமான முறையில்  முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதையும் அனைவரும் உறுதிசெய்யவேண்டும். இப்பிரச்சனையின் காரணமாக குறித்த சிறுமியின் எதிர்கால வாழ்வு, அவரின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாதவண்ணம் பாதுகாக்கப்படுவதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியின் மகளிர் பிரிவாகிய நாம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவோம்’ எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

M.T. ஹைதர் அலி