வரலாறு எம்மை துரோகிகளாகக் கருத நமது செயற்பாடுகள் இடமளிக்கக் கூடாது: றிசாத் உணர்வு பூர்வமான கோரிக்கை

 1927745_563230193843030_5367819585006447336_n_Fotor

வவுனியா மக்களினதும் விவசாயிகளினதும் நன்மை கருதி அந்த மாவட்டத்தில் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலயம் வவுனியா நகரத்துக்கு அண்மையில் உள்ள, விவசாயப் பண்ணை அமைந்துள்ள இடத்தில் அமைப்பதற்கு தீர்மானம், வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்தக்கூட்டத்தில் எம்.பிக்களான மஸ்தான், கலாநிதி சிவமோகன், மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான லிங்கநாதன்,  தர்மபால செனவிரட்ன,  இந்துராஜா மற்றும் வவுனியாவைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகளும்  இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைத்தனர். 

12833228_219043591782921_1193591020_n_Fotor

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்தபோது கூறியதாவது,

வவுனியாவுக்கு கிடைத்துள்ள இந்த அதிஷ்டத்தை நாம் இழந்துவிட முடியாது. கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் பிளவுகள் ஏற்பட்டதனால் தான் நாம் பின்னடைந்துள்ளோம்.

வவுனியாவைப் பொறுத்த வரையில் இன்று ஒரு சரித்திரம் முக்கியத்துவம் மிக்க நாள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் ஒன்று கூடி ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொண்டுள்ளோம். இந்த முடிவை நாம் மேற்கொண்டிருக்காவிட்டால் வரலாறு எம்மைக் குறை கூறும். 

வவுனியா மாவட்ட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினையான சந்தைப்படுத்தல் பிரச்சினைக்கு, அமைக்கப்படவுள்ள பொருளாதார வலயம் தீர்வைப் பெற்றுத் தரும். 

விவசாயப் பண்ணை அமைந்துள்ள இந்த மேட்டு நிலக்காணியில் பொருளாதார வலயத்தை அமைத்து, அதற்கு மாற்றீடாக பரிசங்குளத்தில் 200 ஏக்கர் காணியில் நவீன முறையிலான புதிய விவசாயப்பண்ணை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். 

மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தப் பொருளாதார வலயம் வவுனியா மக்களை வளமுள்ளவர்களாக மாற்றியமைக்கும். வவுனியா மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும். 

இந்தக் காணியை விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருந்த போதும் அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு, இந்த இடத்திலே தான் பொருளாதார வலயம் அமைய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முயற்சியை முன்னெடுத்து பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னின்று செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.