தமிழர்களின் வட்டுக்கோட்டை மகாநாட்டினை நினைவூட்டும் மு. கா.வின் பாலமுனை மகாநாடு!

slmc rauff hakeem hasan ali basheer

முகம்மத் இக்பால்  

 

முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் தேசிய மகாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்றது. 

முஸ்லிம் காங்கிரசின் அரசியல் போராட்டத்தில் எதிரிகளுடன் களம்நின்று போராடியதனைவிட, துரோகிகளின் குழிபறிப்புக்களுக்கும், சதிமானங்களுக்கும், சதித்திட்டங்களுக்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் இடையில் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக போராடியதே அதிகம். இந்த தற்காப்பு நடவடிக்கையினால் சில நேரங்களில் தனது கொள்கையை முன்னெடுப்பதில் கட்சி பல தடைகளை எதிர்கொண்டிருக்கின்றது.  

இப்படியான துரோகிகள் எவரும் வெளியிலிருந்து வரவில்லை. மாறாக இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரசினாலும், அதன் தலைவராலும் வளர்க்கப்பட்டவர்கள். தான் அரசியலில் வளர்ச்சி அடையும் வரைக்கும் தலைவருக்கும், கட்சிக்கும் தன்னை விசுவாசிபோல காட்டிக்கொண்டார்கள். பின்பு அமைச்சர் பதவிக்காகவும், தலைவர் பதவிக்காகவும், ஏனைய சில சலுகைகளுக்காகவும் தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சியையும், தலைவரையும் அழிப்பதற்கு இத்துரோகிகளினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அதிகம்.        

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமையினை வலியுறுத்தி, தமிழ் அரசியல் தலைவர்களினால் சாத்வீக போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போராட்டம் இலங்கை அரச படையினர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டதுடன் போராட்டம் நடத்துவதற்கு முன்னின்ற தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டும், சிறையிலடைக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டனர். 

காலங்கள் செல்லச்செல்ல உரிமைகள் வழங்குவதற்கு பதிலாக தனிச்சிங்கள சட்டமும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும், வாகன இலக்க தகடுகளில் சிங்கள மொழியில் “ஸ்ரீ” அடையாளம் பொறிக்க வேண்டுமென்றும், மற்றும் கல்வியில் சீர்திருத்தம் என புதிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இருந்த உரிமைகளும் மாறிமாறி வந்த சிங்கள அரசாங்கங்களினால் நாளாந்தம் பறிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. 

எனவே தங்களது முப்பது வருட அரசியல் போராட்டம் தோல்வி அடைந்ததாலும், அரசியல் போராட்டம் மூலம் தமிழ் மக்களுக்கு எதிர்காலங்களில் எந்தவித உரிமையினையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று நடைமுறையில் உணர்ந்ததாலும், சாத்வீக போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து போராட்ட பாதையை மாற்றுமுகமாக, தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு பிரிந்து சென்று “சோஷலிச தமிழீழ தனியரசு” அமைக்க போராடுவது என்று அன்றைய தமிழ் மக்களின் அரசியல் தலைவர், “தந்தை செல்வா” என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழரசு கட்சியினால் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழீழ தனியரசை அமைப்பதற்காக தமிழ் இளைஞ்சர்கள் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழரசு கட்சி மகாநாட்டில் அறைகூவல் விடுத்தார். தந்தை செல்வாவின் இந்த அறைகூவலுக்கு பின்பே தமிழ் இளைஞ்சர்கள் ஆயுதப்போராட்டம் மூலம் தமிழீழ தனியரசை அமைப்பதற்காக போராட்டங்களை முன்னெடுத்தனர்.     

அதுபோன்று எமது அரசியல் தந்தை மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்தார். தமிழர்கள் எவ்வாறு மூன்று தசாப்தங்கள் சாத்வீக போராட்டங்களினை முன்னெடுத்தார்களோ அதுபோன்று முஸ்லிம் மக்களின் தனித்துவ அரசியல் பயணமும் முப்பது வருடங்களை அடைந்து விட்டது. தமிழர்களின் அரசியலுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் எழுட்சி அரசியல் முப்பது வருடங்கள் பின்னோக்கி இருக்கின்றது. 

தமிழர்களின் சாத்வீக போராட்டங்களுக்கு பிந்திய முப்பது வருட ஆயுதப்போராட்டங்களில் முஸ்லிம் மக்களின் போராட்டமும் புதைந்து கிடக்கின்றது. அதாவது முஸ்லிம் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ள ஆயுதமேந்தி போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. அதனையே தமிழ் இளைஞ்சர்கள் மேற்கொண்டார்கள். அத்துடன் தமிழ் ஆயுத இயக்கங்களினால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பங்களினால் முஸ்லிம்களின் பாதுகாப்பும், அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையும் சர்வதேசத்தினை ஏற்றுக்கொள்ள செய்துள்ளது. 

எனவே மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையில் எமது அரசியல் போராட்டம் புதிய பாதையை நோக்கி பயணிக்கும் ஆயத்தங்களுடன் முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு பாலமுனையில் நடைபெற இருக்கின்றது. அன்று தமிழர்களின் தந்தை செல்வா அவர்கள் தங்களது அரசியல் பயணத்தில் மாற்றத்தினை கொண்டுவந்ததுபோல், இன்றைய முஸ்லிம் மக்களின் அரசியல் தந்தை ரவுப் ஹகீம் அவர்களினால் எமது எதிர்கால அரசியல் பயணத்தினை முன்னெடுப்பதற்கான புதிய மாற்றத்தினை நோக்கிய அறைகூவலாக, பாலமுனையில் நடைபெற இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.